தேசிய நிலக்கரி குறியீட்டெண் (என்.சி.ஐ) என்பது அறிவிக்கப்பட்ட நிலக்கரி விலை, ஏல விலை மற்றும் இறக்குமதி விலை உள்ளிட்ட அனைத்து விற்பனை நடவடிக்கைகளிலும் உள்ள நிலக்கரியின் ஒருங்கிணைந்த விலைக் குறியீடாகும். 2017-18 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு நிறுவப்பட்ட இந்தக் குறியீட்டெண் சந்தை இயக்கத்தின் நம்பகமான வழிகாட்டியாக செயல்படுகிறது.
தேசிய நிலக்கரி குறியீடு, 2022, நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 நவம்பரில் 17.54% குறைந்து 155.09 புள்ளிகளாக இருந்தது. இது சந்தையில் நிலக்கரியின் வலுவான விநியோகத்தை எடுத்துக் காட்டுகிறது. வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இருப்பு உள்ளது.
இதேபோல், கோக்கிங் அல்லாத நிலக்கரிக்கான குறியீட்டெண் 2023 நவம்பரில் 143.52 புள்ளிகளாக இருந்தது. இது நவம்பர் 2022 உடன் ஒப்பிடும்போது 25.07% வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் ஏராளமான நிலக்கரி இருப்பதைக் குறிக்கிறது.
நிலக்கரி விலை குறியீட்டெண்ணின் சரிவு நாட்டில் மிகவும் சீரான சந்தையை எடுத்துக் காட்டுகிறது. போதுமான நிலக்கரி கிடைப்பதன் மூலம், அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, நீண்டகால எரிசக்தித் தேவைகளையும் சமாளிக்க முடியும். இதனால் நிலையான நிலக்கரித் தொழில் துறையை உருவாக்கி நாட்டின் வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.
எஸ்.சதிஸ் சர்மா