முன்னாள் படைவீரர்களின் தன்னலமற்ற கடமை மற்றும் தியாகங்களுக்கு மரியாதை செலுத்தவும், துணிச்சலான வீரர்களின் உறவினர்களுடன் ஒற்றுமையை வலுப்படுத்தவும் 8வதுஆயுதப்படை வீரர்கள் தினம் 2024, ஜனவரி 14 அன்று நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், குவகாத்தி, மும்பை, செகந்திராபாத், கொச்சி மற்றும் பல இடங்களில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பேரணிகள் நடைபெற்றன.
கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்ற ராணுவ வீரர்கள் பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில், 1,000 முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர், தாய்நாட்டிற்குத் தன்னலமற்ற சேவை செய்த மாவீரர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் முன்னாள் வீரர்களுக்குத் தனி இடம் உண்டு என்று அவர் கூறினார். நமது வீரர்கள் குடும்பம், சாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தேசம் பாதுகாப்பாக இருந்தால், அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் தங்கள் கடமைகளை திறம்பட செய்கிறார்கள். இது ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் தார்மீக வலிமையை அவர்களுக்கு வழங்குகிறது, “என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் படைவீரர்களின் நலனில் பாதுகாப்பு அமைச்சகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார், ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து சுகாதார பராமரிப்பு மற்றும் மறு வேலைவாய்ப்பு வழங்குவது வரை, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னாள் படைவீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு எல்லா முயற்சியையும் மேற்கொள்கிறது என்று கூறினார்.
“1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானின் 90,000-க்கும் அதிகமான வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தியிருக்கலாம்; ஆனால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப்படி முற்றிலும் மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடித்து அவர்களை முழு மரியாதையுடன் அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்பினோம். எதிரி வீரர்களை இதுபோன்று நடத்துவது மனிதகுலத்தின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்றாகும்” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மாவீரர்களின் உயர்ந்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்கு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் செளகான், பராமரிப்பு கமாண்டிங் ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே, கான்பூர் விமானப்படை நிலையத்தின் ஏர் ஆபிசர் கமாண்டிங் ஏர் கொமடோர் எம்.கே.பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செகந்திராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கலந்து கொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு பொது இடங்களில் ‘வி ஃபார் சீனியர்ஸ்’ என்ற கீதம் இசைக்கப்பட்டது. இந்தியக் கடற்படையின் முன்னாள் படைவீரர் விவகாரங்கள் இயக்குநரகத்தால் வெளியிடப்படும் வருடாந்திர இதழான ‘சாகர் சம்வாத்’ இதழ் வெளியீடும் இந்தக் கொண்டாட்டங்களில் நடைபெற்றது. இந்திய விமானப்படையும் இந்திய ராணுவமும் முறையே ‘வாயு சம்வேத்னா’ மற்றும் ‘சம்மான்’ இதழ்களை வெளியிட்டன.
கடந்த 1953-ம் ஆண்டு இதே நாளில் ஓய்வு பெற்ற ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி14-ம்தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
எம்.பிரபாகரன்