புத்தரின் போதனைகள் கடந்த கால விஷயங்கள் அல்ல எதிர்காலத்திற்கான வழிகாட்டி! – குடியரசு துணைத்தலைவர் .

புத்தரின் போதனைகள் கடந்த கால விஷயங்கள் அல்ல என்றும், அவை நமது எதிர்காலத்திற்கான வழிகாட்டி என்றும் குடியரசு துணைத் தலைவர்   திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

புதுதில்லியில் அமைதிக்கான ஆசிய பௌத்த மாமன்றத்தின் (ஏபிசிபி) 12-வது மாநாட்டில் இன்று (17.01.2024) உரையாற்றிய அவர், புத்தரின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய போதனைகள், உலகை அச்சுறுத்தும் வெறுப்பு மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிரானவை என்று கூறினார்.

புத்தரின் போதனைகள் நிலைத்தன்மை, எளிமை, நிதானம் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் பயபக்தி ஆகியவற்றின் பாதையை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அவரது கருத்துகள், நம்மை உள் அமைதி, இரக்கம் மற்றும் அகிம்சையை நோக்கி வழிநடத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் நலன், உள்ளடக்கிய தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவற்றில் தேசம் உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும், இதில் புத்தரின் கொள்கைகள் வழிகாட்டும் சக்தியாக செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்தால் அழியாத புத்தரின் ஞானம் அமைதிக்கான சக்திவாய்ந்த, இணக்கமான, ஆரோக்கியமான, தடையற்ற பாதையை வழங்குகிறது என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம், மோதல்கள், பயங்கரவாதம் மற்றும் வறுமை போன்ற  சவால்களை சமாளிக்க ஒரு கூட்டு அணுகுமுறை தேவை என்று அவர் தெரிவித்தார். இதில் பகவான் புத்தரின் போதனைகள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக  உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அமைதிக்கான ஆசிய பௌத்த மாமன்றத்தின் 12-வது மாநாட்டின் கருப்பொருளான  உலகளாவிய தென்பகுதி நாடுகளின் பௌத்த குரல் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்த கருப்பொருள் இந்தியாவின் நிலையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். ஜி 20 தலைமைத்துவத்தின் போது  தென்பகுதி நாடுகளின் சிக்கல்களை எடுத்துரைத்த இந்தியா உறுதிபூண்டு செயல்பட்டதாக அவர் கூறினார்.

பகவான் புத்தரின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்ட தேசம் இந்தியா என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளை எடுத்துரைத்தார். “உலகிற்கு புத்தரை வழங்கிய ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என்று பிரதமர் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். இது புத்த தேசம் எனவும், யுத்த தேசம் அல்ல என்றும் பிரதமர் கூறியதையும் குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார்.

உலகெங்கிலும் உள்ள இளைய தலைமுறையினர் புத்தரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் இந்தியா உறுதிப்பாட்டுடன் செயல்படுவதாக திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, அமைதிக்கான பௌத்த மாமன்றத்தின் தலைவர் திரு டி.சோய்ஜாம்ட்ஸ் டெம்பெரல், கம்போடியா அரசின் வெளியுறவு துணை அமைச்சர் டாக்டர் கைசோவன்ரதனா மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply