இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க பாடுபடுவதுடன் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
அகமதாபாத்தில் இன்று (19-01-2024) குஜராத் பல்கலைக்கழகத்தின் 72-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய நவீன தொழில்நுட்பங்களின் ஆக்கப்பூர்வமான அம்சங்களை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள், விவேகமுள்ளவர்களாக செயல்பட்டு ஜனநாயக நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் பூமி இந்த குஜராத் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான அடல்-கலாம் மையத்தை குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்தார். இந்த மையம் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலில் ஒரு முக்கிய மையமாகவும், மாற்றத்திற்கான இடமாகவும் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவவிரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா