மாணவர்களிடையே தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு தனித்துவ முயற்சியாகத் தேர்வு குறித்த உரையாடலைப் பிரதமர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இந்த உரையாடலுக்கு முன்பாக நாடு முழுவதும் 774 மாவட்டங்களில் உள்ள 657 கேந்திரிய வித்யாலயா மற்றும் 122 நவோதயா பள்ளிகளில் நேற்று (23.01.2024) நாடு தழுவிய ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாபெரும் ஓவியப் போட்டியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தேசபக்தி உணர்வை வளர்க்கும் வகையிலும் அவரது பிறந்த நாளில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
மாணவர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஓவியப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளைக் கல்வி அமைச்சகம் நடத்தியது. மாரத்தான் ஓட்டம், இசைப் போட்டி, வீதி நாடகம், விழிப்புணர்வு வாசகப் பதாகைகள் தயாரித்தல், யோகா மற்றும் தியான அமர்வுகள் போன்றவை ஜனவரி 12 (தேசிய இளைஞர் தினம்) முதல் ஜனவரி 23 வரை நடைபெற்றன.
23.01.2024 அன்று நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேர்வு குறித்த உரையாடல் 7 வது ஆண்டு நிகழ்ச்சிக்கு மைகவ் இணையதளத்தில் 2.26 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இந்தத் தனித்துவ நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் கலந்துரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் மாபெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, தேர்வு குறித்த பிரதமரின் உரையாடல் நிகழ்ச்சி 2024 ஜனவரி 29 அன்று காலை 11 மணி முதல் புது தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் நேரடியாகப் பங்கேற்றுப் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர்.
எம்.பிரபாகரன்