கல்வி அமைச்சகம் – அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) முதலீட்டாளர் கட்டமைப்பு” என்ற திட்டத்தை மத்தியக் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று (01-02-2024) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், மாணவர்கள், ஆசிரியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களை ஒரே தளத்தில் கொண்டு வந்து புதிய கண்டுபிடிப்புக் கலாச்சாரத்தை வலுப்படுத்த இந்த முன்முயற்சி உதவும் என்றார். புத்தொழில்களுக்கான நிதிப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் இந்த முயற்சி உதவும் என்று அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, புத்தொழில் சூழலை ஊக்குவிப்பதற்கும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கும் இது மற்றொரு உறுதியான முயற்சியாகும் என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சகம்-ஏஐசிடிஇ முதலீட்டாளர் கட்டமைப்பு, யோசனை உருவாக்கம் முதல் வணிக ரீதியான வெற்றி வரை ஆற்றல்மிக்க புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார். பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளில் மாணவர்களிடம் உருவாகும் தொழில் யோசனைகள் மீதான முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராம் பேசுகையில், இந்த முதலீட்டாளர் கட்டமைப்பு மூலம் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தீர்வுகளை உருவாக்க முடியும் என்றார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா