அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குவஹாத்தியில் விளையாட்டுக் கட்டமைப்புகள், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இதில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ரூ. 11,000 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் அன்னை காமாக்யாவின் ஆசியுடன் இன்று அசாம் மாநிலத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் அசாமின் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மாநிலத்தில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை முன்னேற்றம் அடையும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்படும் வளர்ச்சித் திட்டத்திற்காக அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நேற்று மாலை தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்த குவஹாத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பல்வேறு புனிதத் தலங்களுக்கு அண்மையில் தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று அன்னை காமாக்யாவின் தலத்திற்கு வருகை தந்துள்ளதற்கும், மா காமாக்யா திவ்ய லோக் பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டப் பணி முடிந்ததும், பக்தர்களுக்கு வசதிகள் மேலும் அதிகரிக்கும் என்றார். அன்னை காமாக்யாவின் தரிசனத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் மூலம் அசாம் மாநிலம் வடகிழக்குப் பகுதியின் சுற்றுலா நுழைவாயிலாக மாறும் என்று கூறிய பிரதமர், மாநில அரசு மற்றும் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் முயற்சிகளைப் பாராட்டினார்
இந்திய புனித தலங்கள் மற்றும் கோயில்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த இடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாகரிகத்தின் அழிக்க முடியாத அடையாளமாக திகழ்கின்றன என்று கூறினார். பாரதம் சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியையும் எவ்வாறு எதிர்கொண்டு மீண்டு வந்தது என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் சிறப்பாகக் கருதப்பட்ட நாகரிகங்கள் இன்று எவ்வாறு அழிந்து நிற்கின்றன என்பதை நாம் கண்பதாக அவர் கூறினார். அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த கலாச்சாரம் மற்றும் அடையாளங்கள் கண்டுகொள்ளப்படாமல் போன போக்கு தொடங்கியதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் புனித இடங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகள் தவறியதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட கொள்கைகளின் உதவியுடன் இது சரி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அசாம் மக்களுக்கு இந்த கொள்கைகளின் நன்மைகளை விளக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலத்தில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீக இடங்களை நவீன வசதிகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களின் விரிவாக்கத்தைக் குறிப்பிட்ட அவர், முன்பு அவை மிகப் பெரிய மாநகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்தன என்றார். இப்போது ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் ஆகியவை நாடு முழுவதும் பல இடங்களுக்குப் பரவியுள்ளது என்று அவர் கூறினார். அசாமில் முன்பு 6 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது என்றும் வடகிழக்கில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையமாக இந்த மாநிலம் படிப்படியாக மாறும் என்றும் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்