இந்திய எரிசக்தி வாரம் 2024-ன் இரண்டாவது ஆண்டு நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவாவில் தொடங்கி வைத்தார். உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எரிசக்தித் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இந்தத் துறையில் அரசு பெருமளவில் செலவிடும் தொகை இந்தியாவில் முதலீடு செய்வதற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
உள்கட்டமைப்புக்காக இந்தியா ரூ.11 லட்சம் கோடி செலவிட உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் பெரும்பகுதி நிச்சயமாக எரிசக்தித் துறைக்குச் செலவிடப்படும் என்று அவர் கூறினார்.
தொடக்க விழாவில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்தியா உலகின் எரிசக்தி மையமாக வேகமாக மாறி வருகிறது என்று கூறினார்.
இந்த ஆண்டு இந்திய எரிசக்தி வார விழா குறித்து பேசிய அவர், உலக எரிசக்தித் துறையில் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார். எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், எரிசக்தி நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் முதன்மை திட்டங்களான பிரதமர் உஜ்வாலா யோஜனா மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
எம்.பிரபாகரன்