மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ‘சைபர் சுரக்ஷித் பாரத்’ எனப்படும் பாதுகாப்பான இணையதள இந்தியா என்ற முயற்சியின் கீழ், இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அனைத்து அரசுத் துறைகளிலும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (CISOs) மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கும் தேசிய மின் ஆளுகைப் பிரிவு பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது.
2024, பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை இந்தப் பயிற்சி புதுதில்லியில் நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, பீகார், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் புது தில்லியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார், இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அச்சுறுத்தல்களைக் குறைத்தல் மற்றும் உரியமுறையில் எதிரிவினையாற்றுதல், எதிர்வினை ஆகிய இரண்டு படிகளில் சிஐஎஸ்ஓ-க்கள் எனப்படும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார்.
விழிப்புணர்வை அதிகரித்தல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இணைய நெகிழ்திறன் சூழலை உருவாக்க அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்க உதவுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும் என்று திரு புவனேஷ்குமார் கூறினார்.
திவாஹர்