தற்போது ரியாத்தில் நடைபெற்று வரும் உலகப் பாதுகாப்பு கண்காட்சி 2024, முப்படையில் உள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டது. இது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகியோர் இந்தக் கண்காட்சியின் பல்வேறு கருத்தரங்குகளில், குறிப்பாக சர்வதேசப் பெண்கள் பாதுகாப்பு கருப்பொருள் நிகழ்வுகளில் ஆயுதப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பிப்ரவரி 07-ம் தேதி, அமெரிக்காவுக்கான செளதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பண்டர் அல்-சவுத் தொகுத்து வழங்கிய ‘பாதுகாப்பில் சர்வதேசப் பெண்கள் – உள்ளடக்கிய எதிர்காலத்தில் முதலீடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் ஒரு குழு உறுப்பினராக மைய மேடையில் கலந்து கொண்டார். ஸ்குவாட்ரன் லீடர் தடைகளை உடைத்து வானத்தில் பறக்கும் தனது எழுச்சியூட்டும் பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் மதிப்பிற்குரிய போர் விமானிகள் கிளப்பில் அங்கம் வகிக்கும் அவர், தலைமைத்துவம், மீள்திறன், நவீன காலப் போரில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு பற்றி விளக்கிய போது, அவரது நுண்ணறிவு பல்வேறு பார்வையாளர்களை ஈர்த்தது. குடியரசு தின அணிவகுப்பில் (2021) பங்கேற்ற முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற அவர், 2024 குடியரசு தின விழாவிலும் பங்கேற்றார்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பொனுங் டொமிங், வடக்குப் பிரிவில், 15,000 அடிக்கு மேல் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த எல்லை பணிக்குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி ஆவார். பொறியியல் அதிகாரியாக பல சவாலான பணிகளில் முன்னணியில் இருந்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளில் தனது நிபுணத்துவத்தை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா