சுகாதார வசதிகள், அத்தியாவசிய நிதிச் சேவைகள், சமையல் எரிவாயு இணைப்புகள் பெறுதல், ஏழைகளுக்கு வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, முறையான ஊட்டச்சத்து, நம்பகமான சுகாதாரம், தூய்மையான குடிநீர், தரமான கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தேவையான சேவைகளை அணுகச் செய்வதற்கும் தனது முன்னோடித் திட்டங்களைப் பரவலாக்கும் இயக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்களிப்புடன் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நோக்கத்துடன், “வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம்” என்ற பெயரில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், ஜல் சக்தி அபியான் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்திற்கான நோடல் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டனர். அதேபோல், இந்தப் பயணத்தை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் திறம்பட ஒருங்கிணைக்க மாநிலங்கள் / மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)ம், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்