குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் 2018-ன் கீழ், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக, பிரத்யேக போக்சோ (இ-போக்சோ) நீதிமன்றங்கள் உட்பட விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான நிதியுதவித் திட்டத்தை 2019 அக்டோபர் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் ஆரம்பத்தில் ஓராண்டுக்கு நடைமுறையில் இருந்தது. பின்னர் 2023 மார்ச் வரை நீடிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை இத்திட்டத்தை 01.04.2023 முதல் 31.03.2026 வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1952.23 கோடி மொத்த ஒதுக்கீட்டில் நீட்டித்துள்ளது. நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு உயர் நீதிமன்றங்கள் சமர்ப்பித்த தரவுகளின்படி, டிசம்பர் 2023 வரை, நாடு முழுவதும் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 411 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 757 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை 2,14,000-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தி முடித்துள்ளன. தமிழ்நாட்டில் 14 விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் 6228 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது, பெண்கள் பாதுகாப்பு, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுதல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்தல் மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வகை செய்யும் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
இந்த நீதிமன்றங்கள் 2023 டிசம்பர் 31, நிலவரப்படி 2,14,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளன. தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு வரை 10668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 6228 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 4440 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தகவல்களின்படி, விரைவு நீதிமன்றங்களில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 81,471 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் இந்தக் காலகட்டத்தில் 76,319 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக 93.6% அளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவாஹர்