மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற தலைமை நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மாலத்தீவின் குடிமைப் பணியாளர்களுக்கான 32-வது திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒரு வார நிகழ்ச்சி 2024, பிப்ரவரி 5 முதல் 9 வரை திட்டமிடப்பட்டது. இதில் 40 கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
2019 ஆம் ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தின் போது, என்சிஜிஜி மற்றும் மாலத்தீவின் சிவில் சேவைகள் ஆணையம் (சிஎஸ்ஜி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது . கொவிட் -19 தொற்றுநோயால் இடையூறுகள் இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2019-2024 காலகட்டத்தில் மாலத்தீவின் 1000 அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்துவதில் என்சிஜிஜி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் நிரந்தர செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணை நிரந்தர செயலாளர்கள், ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மாலத்தீவு தகவல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூத்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடிமக்களையும் அரசையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முன்னோடி திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிந்ததன் மூலம் மாலத்தீவு அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
மின் ஆளுமை, டிஜிட்டல் இந்தியா, நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய பொதுச் சேவைகளை அனைவருக்கும் விரிவுபடுத்துதல், சேவை வழங்கலில் ஆதாரைப் பயன்படுத்துதல், பொதுமக்கள் குறை தீர்க்கும் அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு முன்முயற்சிகளை குறிப்பாக கடலோரப் பகுதியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்தியா மாலத்தீவு உறவுகள், நிதி தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கம், பொதுக் கொள்கை மற்றும் செயலாக்கம், நிர்வாகத்தில் நெறிமுறைகள், பேரிடர் மேலாண்மையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பரவலில் அதன் தாக்கம், நடத்தை மாற்ற மேலாண்மை, கடலோர பிராந்தியத்தில் வேளாண் அடிப்படையிலான நடைமுறைகள், இந்தியாவில் டிஜிட்டல் சுகாதாரம், தலைமைப் பண்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு திறன்கள், மின் ஆளுமை மற்றும் டிஜிட்டல் இந்தியா, பாலினம் மற்றும் வளர்ச்சி, 2030-க்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகள் இந்தப் பயிற்சியில் அடங்கும்.
வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களைப் பார்வையிட்டு நேரடி அனுபவங்களைப் பெற்றனர். தாஜ்மஹால், குதுப்மினார் உள்ளிட்ட பாரம்பரிய இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா