இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கடல், கடலோர ஆய்வுப் பிரிவு “கடல் ஆய்வு: திறன்கள், வாய்ப்புகள்” என்ற தலைப்பில் 2024 பிப்ரவரி15 அன்று மங்களூரில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிலரங்கு கடல் ஆய்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
அரசு அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உட்பட கடல் ஆய்வில் முக்கிய தொடர்புடையவர்களிடையே ஒத்துழைப்பு, அறிவு பகிர்வை வளர்ப்பதை இப்பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் வி.எல்.காந்த ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு. ஜனார்த்தன் பிரசாத், பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், மாநில சுரங்கம், புவியியல் இயக்குநரகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் சுரங்கத் தொழில் பிரதிநிதிகள், சுரங்கத்துறை சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள்.
கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு, முறைப்படுத்துதல்) சட்டம், 2002-ல் திருத்தங்கள், இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் 35 கனிமப் பகுதிகளை ஏலத்திற்காக சுரங்க அமைச்சகத்திடம் ஒப்படைத்தது, தனியார் கனிம ஆய்வு முகமைகளுக்கு கடலில் ஆய்வு செய்வதற்கான வரைவு வழிகாட்டுதல்களை உருவாக்குவது ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த முக்கியமான விவாதங்கள் கடல் ஆய்வு நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஒழுங்குபடுத்துவதையும், எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
திவாஹர்