தமிழக அரசின், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.
பட்ஜெட்டானது சமூக நீதி, பொருளாதாரம், நிதி, பசுமை வழிப்பயணம் உள்ளிட்ட 7 இலக்குகளை கொண்டதாக இருக்கும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பே.
ஏனென்றால் பட்ஜெட்டில் மொழி பெயர்ப்பு, தொல்லியல் அகழாய்வு, புதிய பேருந்து, கிராம நகரப்புற சாலைகள் விரிவாக்கம், நீர்நிலைகள் புனரமைப்பு, கூட்டுக்குடிநீர், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சிறு குறு நடுத்தர தொழில், சிப்காட் தொழிற்பூங்கா, மருத்துவ செலவுத் தொகை போன்றவற்றிற்கு நிதி ஒதுக்குவதும், அது பற்றி விரிவாகக் கூறுவதும் வழக்கமானது.
இது போன்ற அறிவிப்புகள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பயன் தராது. காரணம் மக்கள் வறுமையில் இருந்து விடுபடவில்லை; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை; விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை; மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கப்படவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வரும் வேளையில் பட்ஜெட்டானது தமிழக மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கவில்லை.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தமிழக தி.மு.க அரசு ஏற்கனவே கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளில் மிக முக்கிய வாக்குறுதிகளான விவசாயம் சார்ந்த, தொழிலாளர் சார்ந்த, ஓய்வூதியர்கள் சார்ந்த வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் முழுமையாக இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்ற மகளிரின் எதிர்பார்ப்புக்கு எதிரான, சாமானிய மக்களின் வருவாயைப் பெருக்க உதவாத பட்ஜெட்டாகத் தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.
மத்திய அரசைப் பற்றி குறை கூறி மத்திய அரசின் திட்டங்களாலும் தமிழகம் வளர்ச்சி அடைவதை மறைக்க முயற்சிப்பது தமிழக அரசின் செயல்பாடாகும்.
நிதிநிலைமையை, வரி வருவாயைப் பற்றிக்கூறும் போது அதனை சமாளித்த, சமாளிக்கக்கூடிய முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பதாக தெரியவில்லை.
எனவே தமிழக அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொண்டு, தமிழக மக்களுக்காக வளமான தமிழகத்தை ஏற்படுத்த மக்களுக்கான ஆட்சியாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்