கனடாவின் சஸ்காட்சுவான் மாகாண பிரீமியர் திரு ஸ்காட்மோ தலைமையிலான உயர்மட்ட கனடா தூதுக்குழு இன்று (21.02.2024) புதுதில்லியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தது. மின்சார வாகனங்கள், இணையதள அமைப்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், எதிர்கால உற்பத்தி நடைமுறைகள், பசுமை ஹைட்ரஜன், ஆழ்கடல் ஆய்வு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுத் திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
கனடா குழுவினரை வரவேற்றுப் பேசிய திரு ஜிதேந்திர சிங், கனடாவில் உள்ள 23 லட்சம் இந்திய வம்சாவளியினர் இந்திய-கனடா உறவுகளை வலுப்படுத்தி வருவதாகவும், அவர்கள் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருவதாகவும் கூறினார்.
கனடா நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கூட இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றிருப்பது இது நாடுகளிடையேயான நீண்டகால உறவுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான பங்களிப்பைப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் வழங்கி வருவதாக அவர் கூறினார். இந்திய மாணவர்கள் உயர் கல்விக்கு மிகவும் விரும்பும் இடங்களில் ஒன்றாக கனடா இருப்பதாகவும், அந்த மாணவரகள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் ‘அனுசந்தன்’ தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். இது தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, தனியார் துறை பங்களிப்புடன் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்று அமைச்சர் கனடா தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.
நீடித்த எரிசக்தி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்கள், உயிரி பொருளாதாரம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் அதிகக் கவனம் செலுத்தி, கனடா தொழில் நிறுவனங்களுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் அபய் கரண்டிகர் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திவாஹர்