கதிர்வீச்சு புற்றுநோயியல், 128 ஸ்லைஸ் சி.டி ஸ்கேனர் மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) ஆலை உள்ளிட்ட புதிய சுகாதார வசதிகளை இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விஷ்ரம் சதன் என்ற இரவு தங்குமிடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய மாநுலங்களவை உறுப்பினர் திரு ஜே பி நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனைகளை அதிகரித்தல், மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்குதல், எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை இடங்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது என்றார்.
உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் தற்போது முழுமையாகக் காப்பீடு பெற்றுள்ளனர் என்று அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பிலாஸ்பூரில் சுகாதாரத் துறை தொடர்பான 12 புதிய திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்று கூறினார். இந்த மத்திய அரசு சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்புகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். சுகாதார அவசர நிலைகளைக் கையாள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
உயர்தர சுகாதார சேவைகளை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், அந்த முயற்சியைத் தொடரும் வகையில், நாடு முழுவதும் பல புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், தரமான சுகாதார உள்கட்டமைப்பை கடைசி மைல் வரை கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியில் இன்றைய திட்டங்களின் தொடக்கம் மற்றொரு மைல்கல் என்று கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள இரவு நேர தங்குமிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபின் இதன் மூலம், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
திவாஹர்