இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று உரையாற்றினார். “வளர்ச்சியடைந்த பாரதம்@ 2047: வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் தொழில்துறை” என்ற தலைப்பில் பேசிய திரு தாக்கூர், வரி செலுத்துவோருக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, நேர்மையாக வரி செலுத்துவோர் காரணமாகவே அரசு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் சமூகத் துறைக்கு செலவிட முடிந்தது என்று கூறினார். முன்பெல்லாம் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே உரிய பயனாளிகளைச் சென்றடைந்து வந்ததாகவும், இன்று விடுவிக்கப்பட்ட பணம் அனைத்தும் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டிற்கு யுபிஐ ஒரு எடுத்துக்காட்டு என்று மேற்கோள் காட்டிய அவர், யுபிஐ தொடங்கப்பட்டபோது அதன் செயல்திறன் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தாலும், தற்போது யுபிஐ சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது என்று தெரிவித்தார். “இன்று உலகில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் நமது தொழில்நுட்ப வலிமைக்காக உலகம் நம்மை எதிர்பார்க்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு தொழில்கள் இன்று அரசு ஆதரவுடன் விரைவாக வளர்ந்து வருவதாக திரு தாக்கூர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவோருடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, இந்தியாவின் திறன்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நமது தொழில்துறை தலைவர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply