கொவிட் தொற்றுநோய் தாக்கங்களிலிருந்து பல நாடுகள் மீள்வதற்கு போராடும் நேரத்தில், இந்தியா சிறந்த திறனுடன் முன்னேறி வருகிறது என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். பெங்களூருவில் இன்று புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான ரேவா பல்கலைக்கழக சிறப்பு மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், இந்தியா ஏற்கனவே உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், விரைவில், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறினார். நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 7.3 சதவீத வளர்ச்சி விகிதம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து அதிகரித்து வருவது குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் பின்னணியில் உள்நாட்டு சமூகப் பொருளாதார வெற்றிகளும், நலத்திட்டங்களும் உள்ளன என்றார். கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு 25 கோடிக்கும் அதிகமான மக்கள் பல்பரிமாண வறுமையிலிருந்து மீண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஆயுஷ்மான் பாரத், தூய்மை இந்தியா, அம்ருத் போன்ற திட்டங்களின் வெற்றியின் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத்திற்காக கையிலிருந்து செலவிடப்படும் தொகை 25 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார். 2014 முதல் 10.57 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், இதுவரை 2.51 கோடி கிராமப்புற வீடுகளும், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற வீடுகளும் கட்டப்பட்டுள்ளன என்று திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்