தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய பரிந்துரையை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் அனுப்பியும் அதன் மீது இதுவரை முடிவெடுக்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசின் முதன்மைத் துறைகளில் ஒன்றான திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவுகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வு கடந்த 2013&ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதனால், அத்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு பெற முடியாமல் எழுத்தர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
அரசுத்துறையில் பணியில் சேருவது என்பது மிகவும் கடினமானதாகவும், அதிசயமானதாகவும் மாறி வரும் இந்தக் காலத்தில், பலரும் போட்டிப்போட்டிக் கொண்டு தேர்வுகளை எழுதி அரசுத்துறை பணிகளில் சேருவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று அதில் கிடைக்கும் பதவி உயர்வு தான். பல்வேறு அரசுத் துறைகளில் எழுத்தராக சேரும் பணியாளர்களில் பலர் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகின்றனர். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலும் அதேநிலை தான் இருந்தது. ஆனால், 2013&ஆம் ஆண்டில் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் எழுத்தர்களாக பணியில் சேருபவர்கள் 35 ஆண்டுகள் வரை பணியாற்றியும் பதவி உயர்வு பெறாமல் எழுத்தர்களாகவே ஓய்வு பெறுவது மிகப்பெரிய கொடுமை ஆகும். கடந்த பத்தாண்டுகளில் சுமார் 40 பேர் இத்துறையில் எழுத்தர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர் என்பதே அவர்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும். இந்தத் துரோகம் களையப்பட வேண்டும், 11 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வு தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தான் அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், நியாயமான அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை நியாயப்படுத்த முடியாது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பை மீண்டும் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. இன்னும் கேட்டால், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையராக 2013&ஆம் ஆண்டு முதல் 2023&ஆம் ஆண்டு வரை பணியாற்றிய வெ. இறையன்பு, தமது துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நோக்குடன், அவர்களுக்கான 52 பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்றலாம் என்று 30.12.2021 நாளிட்ட 38703/ணி1/2017 என்ற எண் கொண்ட கடிதத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை அளித்திருக்கிறார்.
இறையன்பு அவர்களுக்குப் பிறகு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குனராக பொறுப்பு ஏற்ற கணேஷ், இறையன்பு அளித்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 17.11.2023ஆம் நாள் நிதித்துறை செயலருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து 20.11.2023&ஆம் நாள் அமைச்சுப் பணியாளர்கள் சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதியரசர் இளந்திரையன், அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக இறையன்பு அளித்த பரிந்துரை குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த ஜனவரி 4&ஆம் தேதி ஆணையிட்டிருந்தார். அதன்பின் 8 வாரங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இறையன்பு பரிந்துரையை அரசு இன்னும் ஆய்வு கூட செய்யவில்லை.
இறையன்பு பரிந்துரையை செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படாது. இன்னும் கேட்டால், பொருளியல் & புள்ளியியல் துறையில் 52 பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்றுவதன் மூலம் அரசுக்கு ரூ.6.47 லட்சம் மிச்சமாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் இறையன்பு பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா