‘‘நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்து நிறைய நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டதாக பொருள்’’ என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியிருந்தார். இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இன்னும் பெண்களால், நள்ளிரவில் இல்லை…. மாலை நேரத்தில் கூட, அவ்வளவு ஏன்? பட்டப்பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் உண்மை.
அதாவது காந்தியடிகளின் சொற்களில் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. எந்த வழியில் பார்த்தாலும் இது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரி வரை எல்லா மாவட்டங்களிலும் சங்கிலிப் பறிப்பு என்பது பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில் கொள்ளையர்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவார்கள். ஆனால், இப்போது வழிப்பறி கொள்ளையர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்றிருக்கிறது. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது இது தான்.
பெண்களுக்கு எதிரான அனைத்துவகை குற்றங்களும் அதிகரித்து விட்டன என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை. குறிப்பாக 18 வயதுக்கும் குறைந்த சிறுமிகளுக்கும், குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் அதிகரித்து விட்டதை தமிழக அரசின் புள்ளி விவரங்களே எடுத்துக் காட்டுகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை, காதலிக்க மறுக்கும் பெண்களை வெட்டிக் கொல்வது, அமிலம் வீசுவது என அனைத்து கேடுகளும் தமிழ்நாட்டில் அன்றாடத் தலைப்புச் செய்திகளாகி விட்டன.
கஞ்சா போதையும், மது போதையும் மனிதர்களை மிருகங்களாக்கிக் கொண்டிருக்கின்றன. அதற்கு பெரும்பாலான இடங்களில் பெண்கள் தான் இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதும், செயல்திட்டங்களை வகுப்பதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாட்டு காவல்துறையில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன் பயனாக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கான தனிப்பிரிவு ஒன்று ஐ.ஜி. நிலையிலான அதிகாரியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கீழ்நிலையிலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
பேருந்து நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மகளிர் காவலர்களை காவலுக்கு நிறுத்த வேண்டும், கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும், மகளிர் மட்டும் பேருந்துகளை அனைத்து நகரங்களிலும் இயக்க வேண்டும் என்பனவெல்லாம் பா.ம.க.வின் கோரிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள். இவை செயல்படுத்தப்படும் போது தான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.
அது சாத்தியமாக வேண்டும் என்றால், பாட்டாளி மக்கள் கட்சி அதிக மக்கள்பிரதிநிதிகளை வென்றெடுக்க வேண்டும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட நீங்கள் தான் அதிகம். நீங்கள் மனது வைத்தால் பா.ம.க.வுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர முடியும். அதை செய்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் சகோதரிகளே!
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா