அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024&ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10&ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்; அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர். ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்து விட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து விட்டு, அதற்கான அறிவிக்கையை வெளியிடாமல் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஏமாற்றுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2023&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. நடப்பாண்டிலும் அறிவிக்கை வரவில்லை.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 75% ஆகும். இவ்வளவு காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசுக் கல்லூரிகளில் தரமான உயர்கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்ப தமிழக அரசால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,331 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது; அதேபோல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது; ஆனால், இரு நடைமுறைகளும் பாதியில் நிறுத்தப்பட்டதால் புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 11 ஆண்டுகளில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும் ஆசிரியர்களை நியமிப்பதில் தேவையற்ற தாமதம் காட்டப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனங்களில் கல்வித்தரம் சரி செய்ய முடியாத அளவுக்கு சீரழிந்து விடும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 2019&20ஆம் ஆண்டில் 51.4% ஆக இருந்தது. அது 2020&21ஆம் ஆண்டில் 46.9% ஆக குறைந்து விட்டது. இதற்குக் காரணம் அரசு கல்லூரிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாத்து தான். இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை உத்தர்காண்ட், கேரளம் ஆகிய மாநிலங்கள் பின்னுக்கு தள்ளிவிடும் வாய்ப்புகள் இருப்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply