அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் இன்று (மார்ச் 9, 2024) நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில், அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் 2,880 மெகாவாட் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ.55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியது.
இந்த விழாவில் அருணாச்சல பிரதேச ஆளுநர் திரு கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தில் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டம் மற்றும் திரிபுராவில் இன்று தொடங்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தித் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். திபாங் அணை இந்தியாவின் மிக உயரமான அணையாக இருக்கும் என்று கூறிய அவர், மிக உயரமான பாலம் மற்றும் மிக உயர்ந்த அணை வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்படுவதைக் குறிப்பிட்டார்.
ரூ.31,875 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள திபாங் திட்டம் நாட்டின் மிக உயரமான அணை கட்டமைப்பாக இருக்கும். இது மின்சார உற்பத்தியை உருவாக்கி, வெள்ளத்தை குறைக்க உதவுவதுடன், இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அருணாச்சல பிரதேசத்தின் லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள முன்லி கிராமத்திற்கு அருகில் 2,880 மெகாவாட் திபாங் பல்நோக்கு திட்டம் வரவுள்ளது. இந்த திட்டத்தில் 278 மீட்டர் உயரமுள்ள அணை இருக்கும். இது இந்தியாவின் மிக உயர்ந்த அணையாக இருக்கும். இந்த அணை ரோலர் காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) தொழில்நுட்பத்துடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக உயரமான கான்கிரீட் அணையாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 11,223 மில்லியன் யூனிட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்தி கிடைக்கும். 108 மாத கட்டுமான காலத்திற்குப் பின், இந்த திட்டம் பிப்ரவரி 2032-ல் செயல்பாட்டுக்கு வரும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், செயல்பாட்டுக் காலத்தில் 300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
எஸ்.சதிஸ் சர்மா