பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) ஊழியர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்க மத்திய ஆயுதக் காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனம் என்ற நிறுவனத்தை (சிஏபிஐஎம்எஸ்) அமைக்க உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) தொலைநோக்குத் திட்டம் வகுத்துள்ளது.
மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (சிஏபிஎஃப்ஐஎம்எஸ்) புதுதில்லி எய்ம்ஸ் வளாகத்தில் நடத்த சிஏபிஎஃப்ஐஎம்எஸ் மற்றும் புதுதில்லி எய்ம்ஸ் இடையே (எம்ஓஏ) புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (08-03-2024) கையெழுத்தானது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான நிதி, வளாகத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான தொடர் செலவுகளை உள்துறை அமைச்சகம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கும். புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை அமைக்க ரூ.2,207.50 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, மருத்துவ பட்டதாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய ஆயுத காவல் படையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். மேலும், எய்ம்ஸ் – சிஏபிஎஃப்ஐஎம்எஸ் வளாகத்தை செயல்படுத்துவதற்காக 4354 பணியிடங்கள் உருவாக்கப்படுவதால் இது வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய வாய்ப்பையும் உருவாக்கும்.
எம்.பிரபாகரன்