மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசார் பாரதி மற்றும் தூர்தர்ஷன் செய்திகள் மற்றும் ஆகாஷ்வாணி செய்திகளின் வலைத்தளங்களின் செய்தி பகிர்வு சேவையான பிபி-எஸ்ஹெச்ஏபிடி சேவையைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தாக்கூர், நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றார். பல ஆண்டுகளாக, ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் செய்தி சேகரிப்பு மற்றும் செய்தி விநியோகத்தின் விரிவான கட்டமைப்பை பிரசார் பாரதி வளர்த்துள்ளது. இப்போது இந்தத் துல்லியமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை இந்தியாவின் மற்ற அச்சு மற்றும் மின்னணு ஊடகத் துறையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என்று அவர் கூறினார். செய்தி நிறுவனங்களுக்கு காட்சிகள் (விஷூவல்கள்) வழங்கப்படும் என்றும், தூர்தர்ஷனின் சின்னம் அதில் இருக்காது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இந்தக் காட்சிகள் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும். இது செய்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். உள்ளடக்க சேகரிப்புக்கான விரிவான கட்டமைப்பு இல்லாத சிறிய செய்தி நிறுவனங்களுக்கு இது பெருமளவில் பயனளிக்கும். இதுபோன்ற அனைத்து அமைப்புகளுக்கும் செய்தி உள்ளடக்கத்தின் ஒற்றை புள்ளி ஆதாரமாக பிபி-எஸ்ஏபிடி இருக்கும் என்று அவர் கூறினார்.
அறிமுகச் சலுகையாக முதல் ஆண்டுக்கு எஸ்.எச்.ஏ.பி.டி சேவை இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், ஐம்பது பிரிவுகளில் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் செய்திகளை வழங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தூர்தர்ஷன் செய்திகள், அகில இந்திய வானொலி மற்றும் நியூஸ் ஆன் ஏர் செயலி ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட இணையதளங்கள் பற்றிப் பேசிய திரு தாக்கூர், விரிவான கைபேசி இணைப்பு யுகத்தில் அகில இந்திய வானொலி தொடர்ந்து மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்றும், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த துல்லியமான தகவல்களின் ஆதாரமாக இன்னும் உள்ளது என்றும் கூறினார். தனிப்பயனாக்கப்பட்ட செய்தி காட்சிகள், முக்கிய செய்திகளுக்கான அறிவிப்புகள், மல்டிமீடியா உள்ளடக்க ஒருங்கிணைப்பு, ஆஃப்லைன் வாசிப்பு திறன், நிகழ்நேர கவரேஜுக்கான நேரடி ஸ்ட்ரீமிங், எளிதான சமூக ஊடகப் பகிர்வு, இருப்பிட அடிப்படையிலான செய்தி விநியோகம், கட்டுரைகளைச் சேமிப்பதற்கான புக்மார்க் மற்றும் சக்திவாய்ந்த தேடல் செயல்பாடு போன்ற பல புதிய அம்சங்களை இந்தப் பயன்பாடு கொண்டிருக்கும்.
முன்னதாக பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகங்களுக்காக பிரசார் பாரதி குழுவினரைப் பாராட்டினார். இந்த இணையதளம் ஏராளமான ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றும், நாடு முழுவதும் அர்த்தமுள்ள செய்தி உள்ளடக்கத்தைப் பரப்புவதில் பயனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பிரசார் பாரதி தனது கட்டமைப்பு சேகரித்த ஆடியோ, வீடியோ, புகைப்படம் மற்றும் உரை அடிப்படையிலான தகவல்களை ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் என்று பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கவுரவ் திவேதி கூறினார்.
பிரசார் பாரதியின் இந்தத் தளம் தினசரி செய்தி காட்சிகளை வீடியோ, ஆடியோ, உரை, புகைப்படம் மற்றும் பிற வடிவங்களில் சந்தாதாரர்களுக்கு ஊடக நிலப்பரப்பிலிருந்து வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசார் பாரதி நிருபர்கள் மற்றும் ஸ்ட்ரிங்கர்களின் பரந்த கட்டமைப்பால் இயக்கப்படும் இந்தச் சேவை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமீபத்திய செய்திகளை வழங்கும்.
பகிரப்பட்ட காட்சிகள் வெவ்வேறு தளங்களில் தனிப்பயனாக்கப்பட்ட கதைசொல்லலுக்குப் பயன்படுத்தப்படலாம். ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவைகள் இலவசமாக கிடைக்கும். சிறிய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இவை பெரிதும் உதவும். இதன் விவரங்கள் https://shabd.prasarbharati.org/ என்ற முகவரியில் கிடைக்கின்றன.
டிடி நியூஸ் மற்றும் ஆகாஷ்வாணி செய்திகளின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நியூஸ் ஆன் ஏர் செயலி ஆகியவை பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தையும், சிறந்த பயனர் ஈடுபாட்டையும் வழங்கும். வலைத்தளங்கள் பயனர் நட்பு அனுபவம் மற்றும் ஈர்க்கக்கூடியவையாக இருக்கும். அவை சமீபத்திய வடிவமைப்பு கூறுகளைக் கொண்டிருக்கும். இதனால் பயனர்கள் தடையற்ற அனுபவத்தைப் பெற முடியும். அர்ப்பணிக்கப்பட்ட பிரிவுகளில் தேசிய, சர்வதேச, கல்வி, சுகாதாரம், வணிகம் மற்றும் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும்.
திவாஹர்