2024-ம் ஆண்டுக்கான 100 நாட்கள் கவுண்ட்டவுனை நினைவுகூரும் வகையில், யோகா பெருவிழா-2024 என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு விஞ்ஞான் பவனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கருப்பொருளான “பெண்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 10-வது முறையாக இது கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா, யோகா பெருவிழா 2024 -ன் நோக்கம் பெண்கள் நல்வாழ்வு மற்றும் உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் யோகாவை ஒரு பரவலான இயக்கமாக கொண்டு செல்வதாகும் என்றார்.
மன அழுத்த மேலாண்மை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பெண்களைப் பாதிக்கும் பல்வேறு நிலைமைகள் குறித்த ஆய்வுகளை அமைச்சகம் தீவிரமாக ஆதரித்துள்ளது. இது அவர்களின் வயது அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிக்கிறது. யோகா என்பது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு விரிவான கருவியாகும். இது அவர்களின் உடல், மனம், உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உள்ளடக்கியதாகும். அதிகாரம் பெற்ற பெண்கள், தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாற்றத்திற்கான வக்கீல்களாக பாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். சமூகம் முழுவதும் உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறார்கள்.
மும்பை யோகா நிறுவனத்தின் இயக்குநர் திருமதி ஹன்சாஜி ஜெயதேவா “மனதின் சமநிலை யோகா” என்று கூறினார். அவர் தனது உரையின் போது, நல்ல செயல்களின் நீடித்த மதிப்பைப் பற்றி வலியுறுத்தினார். அவை நம்மை என்றென்றும் நிலைநிறுத்தும் சிறந்த நாணயமாகும். மற்றவர்களின் செயல்களால் தன்னைத் தொந்தரவு செய்ய விடாமல், மக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், அவர்களைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சியைக் கண்டறிவதையும் அவர் எடுத்துரைத்தார்.
யோகா என்பது அடிப்படையில் விழிப்புணர்வு அறிவியலாகும். இது தனிநபர்கள் தங்கள் உடல், மனம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய ஆழமான விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது என்றும் திருமதி ஜெயதேவா வலியுறுத்தினார்.
பெங்களூருவில் உள்ள எஸ்.வி.யாசா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் எச்.ஆர். நாகேந்திரா, யோகாவை முழுமையான வாழ்க்கைக்கான அறிவியல் என்று கூறினார். ஆயுஷ் சுகாதாரத்தை குறிப்பாக யோகாவை நமது அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பதன் மூலம் நவீன வாழ்க்கை முறை சீர்குலைவுகள் மற்றும் தொற்றா நோய்களால் ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்தியா மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாவை பரப்புவதற்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்திய டாக்டர் நாகேந்திரா, இந்த உலகளாவிய இயக்கத்தை வழிநடத்துவதற்கான இந்தியாவின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஆயுஷ் இணைச் செயலாளர் திருமதி கவிதா கார்க், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் (ஆயுர்வேதம்) சத்ஜித் பால், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் வைத்யா மனோஜ் நேசாரி, தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் குரானா மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயக்குனர் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், திருமதி விஜயலட்சுமி பரத்வாஜ் விருந்தினரை வரவேற்றார்.
முன்னணி யோகா அமைப்புகள், யோகா குருக்கள் மற்றும் பிற ஆயுஷ் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் யோகாவின் பரவலை அதிகரிப்பதே 100 நாட்கள் கவுண்டவுனின் நோக்கமாகும்.
எம்.பிரபாகரன்