விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்திற்கு 2024, மார்ச் 21 – 23 தேதிகளில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையினர் நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திருமதி கலா ஹரி குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின்போது, விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்தில் அட்மிரல் ஆர் ஹரி குமார் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இங்கு அவர் கடற்படை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் அவர் உரையாடினார். கூடுதலாக, அடித்தள நிலையில் உள்ள சவால்கள் / பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவரது பிரியாவிடை பயணத்தின் ஒரு பகுதியாக, சமுத்ரிகா கலையரங்கில் நடைபெற்ற “சிஎன்எஸ்- உடன் இணைவோம்” என்ற ஒரு தனித்துவ நிகழ்வில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக, கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் உள்ள மேகத்ரி கலையரங்கில் பாதுகாப்பு சிவில் அதிகாரிகளுடன் 2024, மார்ச் 21 அன்று அவர் கலந்துரையாடினார்.
இந்தப் பயணத்தின்போது 2024, மார்ச் 21 அன்று விசாகப்பட்டினம், நௌசக்தி நகரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்காகக் கட்டப்பட்ட ‘வீரம்’ என்ற 492 பேர் தங்குமிடத் தொகுப்பைக் கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்.
மத்திய அரபிக் கடலில் 11 சோமாலிய கடற்கொள்ளையர்களை கைது செய்ததற்காகவும், கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பல்களான இமான், அல் நயீமி ஆகியோரிடமிருந்து 17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்களை மீட்டதற்காகவும் ஐஎன்எஸ் சுமித்ராவுக்கு அந்த இடத்திலேயே கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார். ஒருங்கிணைந்த தீயணைப்பு சக்தி, உள்நாட்டு ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் மற்றும் இந்தியக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள் குழு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தப் பணிகளைக் கடற்படை விரைவாக மேற்கொண்டது.
இந்த சந்திப்புகள் கடற்படை வீரர்களின் நலன் மற்றும் ஊக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயனுள்ள விவாதங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்கின.
எம்.பிரபாகரன்