மத்திய பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு .

மத்திய பொதுப்பணித் துறையின் (2022 மற்றும் 2023 தொகுப்புகள்) உதவிச் செயற்பொறியாளர்கள் குழு இன்று (மார்ச் 28, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது.

பொறியாளர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இளம் பொறியாளர்கள் என்ற வகையில், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை உணர்ந்திருப்பதாகவும், அதன் விளைவாக எரிசக்தி திறன்மிக்க தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் அறிந்திருப்பதாகவும்  கூறினார். அவர்கள் உருவாக்கும் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் நிலையானதாகவும், எரிசக்தி திறன் கொண்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அணுகுமுறையில் புதுமையை மேற்கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் வளர்ந்து வரும் சவால்களை திறம்பட சமாளிக்க முடியும். 3டி பிரிண்டிங் யுகத்தில், கட்டிட தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் இப்போது பருவநிலைக்கு இணக்கமானதாகவும், எரிசக்தி திறன் கொண்டதாகவும் இருக்க முடியும். பசுமை கட்டுமானம் காலத்தின் தேவை. புதுமையான கட்டுமான முறைகள் இந்தத் துறையை மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. துல்லியமான வடிவமைப்புகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் வழக்கமான கட்டுமானத்தின் எல்லைகளை உடைக்க முடியும். அவர்கள் கட்டுமானப் பணியை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், உகந்த வளப் பயன்பாட்டின் மூலம் கழிவுகளைக் குறைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார்.

இளம் பொறியாளர்கள் கூட்டு, தொலைநோக்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபோக்கள், ட்ரோன்கள் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பாரம்பரிய சிந்தனையை சீர்குலைப்பதாக அவர் கூறினார். இருப்பினும், செயல்திறனை அதிகரிக்கவும் மேம்படுத்தவும், செயல்முறைகளை தானியக்கமாக்கவும், மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வள நிர்வாகத்தை மேம்படுத்தவும் இவை பயன்படுத்தப்படலாம். சிறந்த, பசுமையான, நீடித்த எதிர்காலத்தை உருவாக்க அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply