ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊகவணிகங்களைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சங்கிலித் தொடர் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் தங்கள் கோதுமை இருப்பு நிலையை போர்ட்டலில் (https://evegoils.nic.in/wheat/login.html) 01.04.2024 முதல் அறிவிக்க வேண்டும் என்றும், பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறு உத்தரவு வரும் வரை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட சட்டபூர்வ நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் இருப்பை போர்ட்டலில் தவறாமலும் சரியாகவும் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களுக்கும் கோதுமை இருப்பு வரம்பு 31.03.2024 அன்று முடிவடைகிறது. அதன்பிறகு, நிறுவனங்கள் கோதுமை கையிருப்பை போர்ட்டலில் வெளியிட வேண்டும். அனைத்து வகை நிறுவனங்களும் அரிசி கையிருப்பு அறிவிப்பு வெளியிடுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனமும் தங்களைப் பதிவு செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை வெளியிடத் தொடங்கலாம். இப்போது, சட்டபூர்வமான அனைத்து நிறுவனங்களும் தங்கள் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை போர்ட்டலில் தவறாமல் அறிவிக்க வேண்டும்.
கோதுமை மற்றும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், இவை நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கோதுமை மற்றும் அரிசி இருப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
எம்.பிரபாகரன்