கடல்சார் துறையில் மாலுமிகளின் முன்மாதிரியான பங்கைக் கொண்டாடும் நிகழ்ச்சி: ஒரு வார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள், பிரதமருக்கு முதலாவது வணிகக் கடற்படை கொடி அணிவிப்பதுடன் தொடங்கின .

ஏப்ரல் 5 ஆம் தேதி வரையிலான ஒரு வார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டத்தின் தொடக்கமாக,  மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன், கப்பல் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் திரு ஷியாம் ஜெகந்நாதன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில், நேற்று (29 மார்ச் 2024) புதுதில்லியில் ‘வணிக கடற்படை கொடி’ பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அணவிக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டது. மேலும், பிரதமருக்கு இந்நிகழ்ச்சியில் நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், கடல்சார் மாலுமிகளின் சேவைகளை கௌரவிப்பதும், இந்தியாவின் கடல்சார் வரலாற்றின் பெருமைகளை நினைவுகூருவதும் ஆகும். நேற்று (மார்ச் 29, 2023) முதல் ஏப்ரல் 5, 2023 வரை ஒருவார காலம் நீடிக்கும் தேசிய கடல்சார் வாரம், மாலுமிகளின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்துகிறது. 1919-ம் ஆண்டில் மும்பையிலிருந்து லண்டனுக்கு (இங்கிலாந்து) தனது முதல் பயணத்தைத் தொடங்கிய மும்பையைச் சேர்ந்த சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் முதல் இந்திய நீராவிக் கப்பலான “எஸ்.எஸ். லாயல்டி” என்ற கப்பலின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை இந்த தினம் குறிக்கிறது.

கப்பல் துறைச் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன் தமது உரையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியை நிலைநிறுத்துவதில் இந்திய மாலுமிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று கூறினார். தேசிய கடல்சார் வார கொண்டாட்டங்கள் கடல்சார் நாயகர்களுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் கூறினார்.

தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. மும்பை, சென்னை, கொல்கத்தா, கண்ட்லா, விசாகப்பட்டினம் போன்ற முக்கிய துறைமுகங்களிலும், பல்வேறு சிறிய மற்றும் உள்நாட்டு நீர் துறைமுகங்களிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த கொண்டாட்டங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்திய கடல்சார் தொழில்துறை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. மேலும் நமது பொருளாதாரத்தில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகின்றன.

கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும், நாட்டின் செழிப்பை அதிகரிப்பதிலும் நமது மாலுமிகள் ஆற்றும் விலைமதிப்பற்ற சேவை மற்றும் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு வார கால சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் வணிக கடற்படை கொடி நாள், கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், ரத்ததான இயக்கங்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாலுமிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

இந்த கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வு ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும்.

நாட்டில் 9 ஆண்டுகளில், மாலுமிகளின் எண்ணிக்கை 140 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில், செயல்பாட்டில்  இருந்த இந்திய மாலுமிகளின் மொத்த எண்ணிக்கை 1,17,090 ஆகும். இது 2023-ம் ஆண்டில் 2,80,000 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச கடற்பயணப் பணிகளில் இந்திய மாலுமிகள் 12 சதவீதம் பேர் உள்ளனர்.

கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030-ன் கீழ், கடல்சார் துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் உலகத் தரத்தை ஏற்படுத்துவதன் மூலம் முதன்மையான கடல்சார் நாடாக உருவெடுக்க இந்தியா முயல்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply