திருச்சிராப்பள்ளி அஞ்சல் மண்டலத்தில் நடத்தப்பட்ட முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு நிகழ்ச்சி.

வரும் மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி அஞ்சல் மண்டலத்தால்  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.பிரதீப் குமார் இ.அ.ப.,அவர்கள் திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்திற்கு வருகை தந்து, அவரது தலைமையில் தேர்தலில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் உறுதிமொழியை அஞ்சல்துறை ஊழியர்கள் உறுதி ஏற்றனர். திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் உள்ள வணிக அஞ்சல் மையத்தில், ஒவ்வொரு தபாலிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் கூடிய ஃபிராங்கிங் அச்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டர்.

மேலும், வாக்குபதிவை ஊக்குவிக்க மத்திய அஞ்சல் மண்டலத்தால் ஒரு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தின் அனைத்து தபால்காரர்களின் சீருடையில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வார்த்தைகளுடன் கூடிய பேட்ஜ் தரப்பட்டுள்ளது. தபால்காரர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வருவதால், இந்த பேட்ஜ் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகமான மக்களுக்கு சென்றடைய உதவும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேட்ஜை தபால்காரர்களிடம் வழங்கினார்.

மேலும் முறையான வாக்காளர் கல்வி மற்றும் வாக்காளர் பங்கேற்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாசகம் உள்ள தபால் வேன்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார், அதைத் தொடர்ந்து அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருச்சிராப்பள்ளி கோட்டம், உதவி இயக்குநர்கள், கணக்கு அலுவலர், முதுநிலை அஞ்சல் அதிகாரி மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply