தேர்தல் அறிவிப்பு மற்றும் மாதிரி நடத்தை விதிகள் (எம்.சி.சி) செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து வெறும் 20 நாட்களில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து 73,379 அனுமதி கோரிக்கைகளைப் பெற்று, அவற்றில் 44,626 கோரிக்கைகளை (60%) சுவிதா தளம் அங்கீகரித்துள்ளது. ஏறக்குறைய 11,200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது பெறப்பட்ட மொத்த கோரிக்கைகளில் 15% ஆகும். மேலும் 10,819 விண்ணப்பங்கள் செல்லாதவை அல்லது நகல் என ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239 கோரிக்கைகளும், மேற்கு வங்கத்தில் இருந்து 11,976 கோரிக்கைகளும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 10,636 கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கோரிக்கைகள் சண்டிகர் (17), லட்சத்தீவு (18) மற்றும் மணிப்பூர் (20) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.
சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தேர்தல்களுக்கான ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் சம வாய்ப்பை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வே சுவிதா இணையதளம் ஆகும். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து அனுமதிகள் மற்றும் வசதிகளுக்கான கோரிக்கைகளைப் பெற்று செயல்படும் செயல்முறையை சுவிதா தளம் நெறிப்படுத்தியது.
கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைச் சென்றடையும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் பிரச்சார காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து , சுவிதா தளம் பல்வேறு வகையான அனுமதி கோரிக்கைகளை வெளிப்படையாக வழங்குகிறது. பேரணிகள் நடத்துவது, தற்காலிக கட்சி அலுவலகங்கள் திறப்பது, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது, காணொலி வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் செல்வது, வாகன அனுமதி பெறுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற பணிகளுக்கான அனுமதிகளை அது வழங்குகிறது.
சுவிதா தளம் (https://suvidha.eci.gov.in) மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணைய வழியில் அனுமதி கோரிக்கைகளை தடையின்றி சமர்ப்பிக்கலாம். பல்வேறு மாநில துறைகளில் உள்ள முதன்மை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப தளத்தால் ஆதரிக்கப்படுகிறது, சுவிதா தளம் அனுமதி கோரிக்கைகளை திறம்பட செயலாக்க உதவுகிறது.
திவாஹர்