மாற்றத்திற்கான முப்படைகளின் சிந்தனை மாநாடு புதுதில்லியில் 2024, ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது. முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப் படைகளுக்கான கூட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டி ‘சிந்தனை மாநாட்டை’ தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சேவையின் தனித்துவத்தையும் மதிக்கும் அதே வேளையில், பாரம்பரிய கருத்துக்களுக்கு ஒரு புதிய அணுகுமுறையை வழங்கவேண்டிய அவசியமும் உள்ளது என்றார். நமது செயல்திறனை அதிகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு சேவையின் திறன்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பலவகையான சேவை அனுபவம் கொண்ட முப்படைகளின் அதிகாரிகள், தலைமையக அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். வளர்ந்து வரும் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அதே வேளையில் நவீனமயமாக்கல், கொள்முதல், பயிற்சி, ஒத்துழைப்பு தொடர்பான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான முன்முயற்சிகள் பற்றிய ஆலோசனைகளை அவர்கள் வழங்கினர்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவரும், பணியாளர்கள் குழுவின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ தனது நிறைவுரையில், இத்தகைய கலந்துரையாடல் இந்திய ராணுவத்தில் எதிர்காலத்திற்கு தயாராவதற்கான மாற்றத்தை உருவாக்கும் கூட்டு செயல்பாட்டு கட்டமைப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா