பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி மூலம் இன்று உரையாற்றினார்.
மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்பதாக கூறினார். அவர்களுடைய பங்கேற்பு பேரிடர் தாங்கு திறன் உள்கட்டமைப்பு குறித்த முக்கிய பிரச்சனைகளில் உலக நாடுகளின் விவாதங்கள் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் என்று கூறினார். பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து அது சிறப்பான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக கூறிய பிரதமர், இது தற்போது 39 நாடுகள் மற்றும் 7 அமைப்புகளுடன் உலகளாவிய கூட்டமைப்பாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். “இது எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த அறிகுறி” என்றும் அவர் மேலும் கூறினார்.
இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் சேதங்கள் பொதுவாக டாலர்களில் மதிப்பிடப்படுவதையும் குறிப்பிட்ட பிரதமர், மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீதான இயற்கைப் பேரிடர்களின் உண்மையான தாக்கம் எண்ணிக்கையில் இல்லை என்று தெரிவித்தார். இயற்கைப் பேரிடர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுவதன் மூலம், ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை இழக்கச் செய்வதாகவும், இயற்கைப் பேரிடர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை சீர்குலைக்கச் செய்து மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறினார். மின் உற்பத்தி நிறுவனங்களை பாதிக்கும் இயற்கைப் பேரிடர்கள் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாளைய சிறந்த எதிர்காலத்திற்கான தாங்குதிறன் கொண்ட உள்கட்டமைப்பில் நாம் இன்று அவசியம் முதலீடு செய்ய வேண்டும்” என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். பேரழிவுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதே வேளையில், புதிய உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் தாங்குதிறன் காரணியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பேரிடர் தாக்கிய பின்னர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டவுடன், உள்கட்டமைப்பில் தாங்குதிறனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இயற்கைக்கும், பேரழிவுகளுக்கும் எல்லைகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒன்றோடொன்று தொடர்புடைய உலகில் பேரிடர்களும், இடையூறுகளும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றார். “ஒவ்வொரு நாடும் தனித்தன்மையுடன் தாங்குதிறன் கொண்டதாக இருந்தால் மட்டுமே உலக நாடுகள் கூட்டாக தாங்குபுதிறனுடன் இருக்க முடியும்” என்று பிரதமர் திரு மோடி கூறினார். பகிரப்பட்ட அபாயங்கள் காரணமாக பகிரப்படும் தாங்குபுதிறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பேரிடர் மீட்புத்திறன் உட்கட்டமைப்பு குறித்த இந்த மாநாடு கூட்டு இயக்கத்திற்காக உலகநாடுகள் ஒன்றிணைய உதவும் என்று கூறினார்.
“பகிரப்பட்ட தாங்குபுதிறனை அடைய, நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். பேரிடர் அபாயம் அதிகமாக உள்ள சிறிய தீவுகள், வளரும் நாடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அத்தகைய 13 இடங்களில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான பேரிடர் தாங்குதிறன் உட்கட்டமைப்பு மாநாடு திட்டம் பற்றி குறிப்பிட்டார். டொமினிகாவில் தாங்குதிறன் கொண்ட வீட்டுவசதி, பப்புவா நியூ கினியாவில் தாங்குதிறன் கொண்ட போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் டொமினிகன் குடியரசு, பிஜியில் மேம்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டினார். பேரிடர் தாங்குதிறன் உட்கட்டமைப்பு மாநாடு உலகில் தென்பகுதி நாடுகள் குறித்தும் கவனம் செலுத்தி வருவது தொடர்பாக அவர் திருப்தி தெரிவித்தார்.
இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பின் போது நிதியுதவியுடன் கூடிய புதிய பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு அமைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இதுபோன்ற நடவடிக்கைகள் பேரிடர் தாங்குதிறன் உட்கட்டமைப்பு மாநாட்டின் வளர்ச்சியுடன் உலகநாடுகளை தாங்குதிறன் மிக்க எதிர்காலத்திற்கு முன்னேற்றிச் செல்லும் என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச பேரிடர் தாங்குதிறன் உட்கட்டமைப்பு மாநாட்டில் பயன்மிக்க விவாதங்கள் நடைபெறும் என்று தாம் நம்புவதாக கூறி தனது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.
எஸ்.சதிஸ் சர்மா