ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஜாக்ரியில் உள்ள எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் 1,500 மெகாவாட் நாத்பா ஜாக்ரி நீர்மின் நிலையத்தில் (NJHPS)இந்தியாவின் முதல் பன்னோக்கு ஒருங்கிணைந்த வெப்ப மற்றும் மின்சக்தி பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எஸ்.ஜே.வி.என். நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இத்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன், நாத்பா ஜாக்ரி நீர்மின் நிலையத்தின் அதிவேக ஆக்ஸிஜன் எரிபொருள் வசதிக்கான எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். கூடுதலாக, இது 25 கிலோவாட் திறன் கொண்ட அதன் எரிபொருள் செல் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும்.
நாட்டின் முதல் பன்னோக்கு ஒருங்கிணைந்த வெப்ப மற்றும் மின்சக்தி பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை நேற்று (24.04.2024) எஸ்.ஜே.வி.என் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி கீதா கபூரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்தைப் பற்றி பேசிய அவர், மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துடன் இணைந்து, எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். இது மின் துறையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி உள்கட்டமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா