வனங்களுக்கான ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 19 வது அமர்வில் வன பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மை முயற்சிகளை இந்தியா எடுத்துரைத்தது.

2024 மே 6 முதல் 10 வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வனங்களுக்கான மன்றத்தின்  19 வது அமர்வில் இந்தியா பங்கேற்றது. இந்த அமர்வின் போது, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்தியா எடுத்துரைத்தது. இது கடந்த பதினைந்து ஆண்டுகளில் வனப்பகுதியை தொடர்ந்து அதிகரிக்க வழிவகுத்தது. உலகளவில், 2010 மற்றும் 2020 க்கு இடையில், சராசரி ஆண்டு வனப்பகுதியில் நிகர ஆதாயத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கட்டமைப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கு விரிவுபடுத்தியதன் மூலம், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு நாடு அளித்து வரும் உயர் முன்னுரிமையை இந்தியா பகிர்ந்து கொண்டது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகள் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 30 ஆண்டுகளைக் குறிக்கும் சமீபத்திய கொண்டாட்டங்கள், உயிரினப் பாதுகாப்பு மற்றும் வாழ்விட பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டு சர்வதேச முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு புலி இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு முக்கியமான படியாக சர்வதேச பெரும் பூனை கூட்டணியை உருவாக்கியதையும் இந்தியா எடுத்துரைத்தது.

மரம் நடுதல் மற்றும் சீரழிந்த வன நிலங்களை மீட்டெடுப்பதை மேற்கொள்ள நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘பசுமை கடன் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியதையும் இந்தியா பகிர்ந்து கொண்டது. இது காலநிலை நடவடிக்கை முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் , டேராடூனில் ஐநா வன அமைப்பின் கீழ் இந்த  முன்முயற்சியை இந்தியா மேற்கொண்டது.  இதில் 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காட்டுத் தீ மேலாண்மை மற்றும் வன சான்றிதழ் குறித்து விவாதங்கள் அந்தக் கூட்டத்தில் நடைபெற்றன. இந்த முயற்சியின் பரிந்துரைகளை இந்தியா இப்போதைய கூட்டத்தில் முன்வைத்தது.

நியூயார்க்கில் நடைபெற்ற 19-வது அமர்வில் ஒருங்கிணைந்த கிராமப்புற தீ மேலாண்மை முகமை, கொரியா வன சேவை மற்றும் சர்வதேச வெப்பமண்டல மர அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ‘கூட்டு ஆளுகை மூலம் நிலப்பரப்பு ஒருங்கிணைந்த தீ மேலாண்மைக்கான கொள்கைகள் மற்றும் உத்திகள்’ என்ற பக்க நிகழ்வும் நடைபெற்றது.

காடழிப்பு மற்றும் வன சீரழிவை நிறுத்துவதற்கும், காடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உத்திசார் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் உலகளாவிய வன இலக்குகளை அடைவது உட்பட நில சீரழிவைத் தடுப்பதற்கான அவசர மற்றும் துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான  பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்திய தூதுக்குழுவிற்கு வனத்துறை தலைமை இயக்குநரும், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளருமான திரு. ஜிதேந்திர குமார் தலைமை தாங்கினார்.

திவாஹர்

Leave a Reply