மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் கென்யா நிர்வாகப் பள்ளியின் தலைமை இயக்குநர் பேராசிரியர் நூர் முகமது ஆகியோர் பங்கேற்ற கூட்டம் 14 மே 2024 அன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய தரப்பில் வேளாண்மை ஆராய்ச்சி மையம், நல்லாட்சிக்கான தேசிய மையம், கென்யாவுக்கான இந்திய தூதரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், கென்ய தரப்பில் கென்ய நிர்வாகப் பள்ளியின் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் கென்யா நிர்வாகப் பள்ளி (KSG) ஆகியவற்றின் மூலம் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் இத்துறையில் இந்தியா-கென்யா இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியாவில் சீர்திருத்தங்களை அமல்படுத்தியதன் மூலம் அடைந்துள்ள முன்னேற்றங்களை இந்திய தரப்பு எடுத்துரைத்தது. தேசிய மின்னணு சேவைகள் வழங்கல் மதிப்பீட்டைப் பயன்படுத்தி மின்னணு சேவைகளின் தரத்தை நிர்ணயித்தது போன்றவை குறித்து இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த விரிவான விளக்கக்காட்சியும் வழங்கப்பட்டது. கென்ய அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கென்ய நிர்வாகப் பள்ளியின் (கே.எஸ்.ஜி.) பங்கை கென்ய தரப்பு எடுத்துரைத்தது.
எம்.பிரபாகரன்