தமிழக அரசு, டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அப்பகுதியில் சாகுபடி செய்த பருத்தி செடி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1,40,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கோடைக்காலத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பருத்தி சாகுபடி அதிகம் நடைபெறும். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் பெருமளவு தண்ணீரில் மூழ்கி வீணாகிவிட்டது. இதனால் டெல்டா மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
வெயில் காலத்திலும், மழைக்காலத்திலும் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனால் அதற்குரிய நிவாரணம் முறையாக, சரியாக காலத்தே கிடைப்பதில்லை என விவசாயிகள் வருந்துகின்றனர்.
மேலும் இயற்கைச் சீற்றத்தால், தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் எப்பொழுது பாதிக்கப்பட்டாலும் அதற்குரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தகவலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் சரியாக கணக்கெடுப்பை மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் வீணாகியுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்