கடக்வாஸ்லாவில் உள்ள கேட்டர்பால் அணிவகுப்பு மைதானத்தில் தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 146-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார். மொத்தம் 1265 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இவர்களில் 337 வீரர்கள் நடப்பு பாடமுறையில் தேர்ச்சி பெற்றவர்கள். பூட்டான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர், மாலத்தீவு உள்ளிட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த 19 வீரர்களும் அடங்குவர். 499 ராணுவ வீரர்கள், 38 கடற்படை வீரர்கள் மற்றும் 100 விமானப்படை வீரர்கள் இடம் பெற்றனர். தற்போது 3-வது மற்றும் 4-வது முறைப் பயிற்சியில் உள்ள 24 வீராங்கனைகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
பட்டாலியன் கேப்டன் ஷோபித் குப்தா ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்து குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்தையும், அகாடமி கேடட் உதவியாளர் மாணிக் தருண் 2-வது இடத்தைப் பிடித்து குடியரசுத்தலைவரின் வெள்ளிப் பதக்கத்தையும், வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்து அன்னி நெஹ்ரா குடியரசுத்தலைவரின் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இந்த அணிவகுப்பில், கோல்ஃப் ஸ்குவாட்ரன் பிரிவு மதிப்புமிக்க ‘சீஃப்ஸ் ஆஃப் ஸ்டாஃப் பேனர்’ விருதைப் பெற்றது.
பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வீரர்கள், பதக்கம் வென்றவர்கள் மற்றும் சாம்பியன் ஸ்குவாட்ரன் பிரிவினரின் கடின உழைப்பு மற்றும் பேரளவிலான செயல்திறனுக்காக ராணுவத் தலைமைத் தளபதி அவர்களைப் பாராட்டினார்.
இந்தப் பயிற்சி நிறைவு அணிவகுப்பைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு அகாடமியின் நினைவுக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள துணிச்சலான வீரர்களின் நினைவுக்கு ராணுவத் தலைமைத் தளபதி மரியாதை செலுத்தினார். நினைவுக் குடில் 10 முதல் 17-வது வரையிலான பயிற்சிக் கால வீரர்களால் கட்டப்பட்டதாகும். அதன் பின்னர் தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவைகளின் அடையாளமாக இது உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா