2024 பொதுத் தேர்தல்களில் எந்தவொரு தகுதியான வாக்காளரும் உடல் அல்லது பிற தடைகள் காரணமாக வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுவரை, நடைபெற்றுள்ள 6 கட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களிடையே வாக்களிப்பதில் மிகுந்த உற்சாகம் காணப்பட்டது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீத அளவு ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி 2024 பொதுத் தேர்தல்களில் முதல் முறையாக இந்தியா முழுவதும் நீட்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் கூறுகையில், தேர்தல் நடைமுறைகள் தொடர்ச்சியான மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாடாக உள்ளது என்று கூறினார். புதிய செயல்முறைகளை உருவாக்க தேர்தல் ஆணையம் செயலாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். நமது நாட்டின் பெருமைக்குரிய பன்முகத்தன்மை உணர்வை உண்மையிலேயே பிரதிபலிக்கும் வகையில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் செயல்முறை முழுவதுமே அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
திவாஹர்