புதுதில்லியில் கோடைகால விழாக் கொண்டாட்டம் 2024-ஐ மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தொடங்கி வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார் இன்று புதுதில்லியில் உள்ள தேசிய பால் பவனில் ஒரு மாத கால கோடைகால விழாக் கொண்டாட்டம் 2024-ஐ தொடங்கி வைத்தார். சம்மர் ஃபீஸ்டா எனப்படும் இந்த கோடை விழாக் கொண்டாட்டம் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகும். இதில் 30 வகையான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மாத கால முகாம் நடைபெறும்.

தொடக்க நிகழ்ச்சியில், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூடுதல் செயலாளரும், தேசிய சிறுவர் மன்றத்தின் தலைவருமான திரு விபின் குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சஞ்சய் குமார், இளம் உள்ளங்களை மேம்படுத்த இதுபோன்ற புதுமையான திட்டங்கள் அவசியம் எ்னறு கூறினார். எதிர்காலத்தில் குழந்தைகள் வாழ்வில் வெற்றிபெற கல்வியுடன் இது போன்ற கல்வி சாராத செயல்பாடுகளும் முக்கியம் என்று அவர் கூறினார்.

2024, மே 29 முதல் ஜூன் 28  வரை நடைபெறும் இந்தக் கோடை விழாக் கொண்டாட்ட முகாமில் படைப்பாற்றல் கலைகள், நிகழத்துக் கலைகள், அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் புதுமையான செயல்பாடுகள் இடம் பெறும். இது ஒவ்வொரு குழந்தையும் புதிய  மற்றும் புதிரான விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவும். இந்தக் கோடை விழாவின் போது, ஒடிசி நடனம், யோகா, இசை கச்சேரிகள், விளையாட்டுகள் போன்றவையும் இடம்  பெறும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, குழந்தைகளை ஊக்குவிப்பார்கள். தில்லியில் உள்ள தகுதியான குழந்தைகள் இதில் எளிதாக பங்கேற்க வசதியாக, தேசிய பாலபவன் மூலம் தில்லி பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பான தேசிய பால் பவன் 1956-ல் நிறுவப்பட்டது. இது குழந்தைகளுக்கான சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் கற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

திவாஹர்

Leave a Reply