தற்போது நடைபெற்று வரும் 77வது உலக சுகாதார மாநாட்டில், நார்வே, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்), ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ), தாய், குழந்தை ஆரோக்கியத்திற்கான கூட்டாண்மை (பிஎம்என்சிஎச்) ஆகியவற்றுடன் இணைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சியை இந்தியா நடத்தியது. வளர்ந்து வரும் சான்றுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதும், தாய், குழந்தை, இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான முக்கிய வாய்ப்புகள் குறித்த உரையாடலை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். பல்வேறு மக்கள்தொகை குழுக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் துறைகளில் கொள்கை மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களைத் தூண்டும் தொடர்ச்சியான மற்றும் அதிகரித்த முதலீட்டை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. பல்வேறு பேச்சாளர்கள் இந்தப் பிரச்சனையில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் உட்பட இளம் பருவ ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசினர். மத்திய சுகாதாரத்துறை செயலாளரும், இந்திய தூதுக்குழுவின் தலைவருமான திரு. அபூர்வ சந்திரா, இந்தத் தலைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் குறித்து வலியுறுத்தினார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் கோடிட்டுக் காட்டினார். மனநல ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் டெலி-மனாஸ் முன்முயற்சியை இந்தியா ஏற்கனவே மேற்கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
வளரிளம் பருவத்தினரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சரியான தகவல் உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் வலியுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஹெகாலி ஜிமோமி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநருமான ஆராதனா பட்நாயக் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.