தொடக்கத்தில் கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய வெள்ளத்துரை தனது கடுமையான முயற்சியால் காவல்துறை தேர்வில் தேர்ச்சிப் பெற்று திருச்சிராப்பள்ளி, பாலக்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொல்வதற்கு தமிழக காவல்துறை வெள்ளத்துரையை தொடர்ந்து ஒரு கருவியாக பயன்படுத்தி வந்தது. இதனால் நாளடைவில் ஊடக வெளிச்சம் வெள்ளத்துரையின் மேல் படர்ந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கும், தமிழகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் வெள்ளத்துரைக்கும் ஒரு இடம் கிடைத்தது.
வீரப்பன் வீழ்த்தப்பட்ட பிறகு அந்த குழுவில் இருந்த அனைவருக்கும் இரட்டைப் பணி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் வெள்ளத்துரைக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது.
காவல் பணியில் இருந்தாலும் வெள்ளத்துரைக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். அவர் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத காரணத்தால், தன் மனைவியை ஒரு அரசியல் கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறக்கினார். அன்று முதல் அரசு தரப்பில் வெள்ளத்துரையின் மேல் சந்தேகப் பார்வை விழுந்தது. இதனால் காவல்துறையிலும் வெளியிலும் இவருக்கு மறைமுக எதிரிகள் அதிகரிக்க ஆரம்பித்தது.
மேலும், இவர் காவல்துறையில் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி ஓய்வு பெறும் இன்றைய நாள் வரை இவர் மீது பல்வேறு விமர்சனங்கள், கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறலகள் என பல புகார்கள் நிலுவையில் இருந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டுதான் ஓய்வு பெறவிருக்கும் இத்தருணத்தில் வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறைச் செயலாளர் 30.05.2024 அன்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை உத்தரவு பிறப்பித்த 18 மணி நேரத்திற்குள் வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ தனது பணிக்காலத்தில் எத்தனையோ பேருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வெள்ளத்துரைக்கு, ஓய்வு பெறும் நேரத்தில் தமிழக உள்துறை அமைச்சகம் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040