பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோதி ராஜினாமா செய்தார். 17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகினார். 294 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்து பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திரிணாமுல் 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றாலும், அந்த கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெற வேண்டுமானால் இன்னும் 38 இடங்கள் தேவைப்படுகிறது. இருந்தும் பாஜக கூட்டணியில் பெரும்பான்மை பலத்திற்கு மேல் கூடுதலாக 20 இடங்கள் இருப்பதால் அந்த கூட்டணியே ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் பாஜவின் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோதி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்வது, பின்னர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரும் கடிதம் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரதமர் பதவியை மோதி ராஜினாமா செய்தார்.
எஸ்.சதிஸ் சர்மா