தமிழக அரசு – அரசுப்பேருந்து, தனியார் பேருந்து, என அனைத்து வகையான பேருந்துகளும் முறையாக, சரியாக, பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தமிழக அரசு மாநிலத்தில் அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்துகளும், கல்வி நிறுவனங்களுக்கான பேருந்துகளும் விபத்துக்கு உட்படாத வகையில் இயக்கப்பட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசுப்பேருந்துகளாலும், தனியார் பேருந்துகளாலும் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகள், படுகாயமடைதல் ஏற்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

குறிப்பாக அரசுப்பேருந்தில் மக்கள் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை இயக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசுப்பேருந்துகளில் உள்ள குறைகள் சரிசெய்யப்படாததால் தான் விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது பழைய பேருந்துகளை இயக்குவதும், டயர் கழன்று ஓடியதும், இருக்கைகளும், மேற்கூரைகளும் பழுதடைந்து இருப்பதும் பயணிகளின் சிரமமான, பாதுகாப்பற்ற பயணத்திற்கு காரணம்.

இந்நிலையில் தமிழக அரசு அரசுப்பேருந்துகளில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். தேவைக்கேற்ப பழையப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். வேகக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்பதை உணர்த்த வேண்டும்.

மிக முக்கியமாக போக்குவரத்தில் உள்ள விதிமுறைகளை அரசுப்பேருந்து, தனியார் பேருந்து, கல்வி நிலையங்களுக்கான பேருந்து என அனைத்து வகையான பேருந்து ஓட்டுநர்களும் முறையாக, சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து வகையான பேருந்துகளும் இயக்கப்படும் பாதைகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டுநர்களிடமும், பொது மக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசு அரசுப்பேருந்துகள் முறையாக, சரியாக பராமரிக்கப்பட, போக்குவரத்துக்கான விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட தனிக்கவனம் செலுத்தி பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply