சென்னையில் பெய்த திடீர் மழையாலும், தொடர்ந்து மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பாலும் மாநகராட்சியானது மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக அவசரப்பணிகளை, அவசியப்பணியாக செய்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்..
தற்போது சென்னையில் பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற வானிலை மைய அறிவிப்பால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடிய நிலை ஏற்படும்.சென்னையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த மழையால் பல பகுதிகளில் சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
ரயில்வே மேம்பாலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.பல தெருக்களிலும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அரசுப்பள்ளிகளிலும் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாமல் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் பல துறைகளின் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேக்கமடைந்து ஆபத்துள்ளது. சில இடங்களில் மழைநீரும், குடிநீரும், கழிவுநீரும் கலந்துள்ளது.
மேலும் மின்கடத்தும் சாதனங்கள், பாதைகள் பழுதடைந்துள்ளதால் ஆபத்தான சூழல் உள்ளது. மழை பெய்து, தண்ணீர் வடியாமல், மின்சாரம் தடைபட்டு, வாகன நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு, மக்களின் நடமாட்டமும் சிரமத்திற்கு உட்பட்டு, அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் தவிர்க்கும் விதமாக, மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக மாநகராட்சி ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
எனவே தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற வானிலை மைய அறிவிப்பால் மழையால் மக்கள் படும் சிரமங்களை குறைக்க மாநகராட்சி உடனடியாக பல்வேறு பணிகளை அவசரப்பணியாக, அவசியப்பணியாக செய்திட தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்