கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டினை எடுத்துக்காட்டுகிறது
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுவது முறையற்றது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பது கவலைக்குரியது.
கள்ளச்சாராயம் விற்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது என்றால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உண்டு.
ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் மக்களுக்கான ஆட்சியாக அமையவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்பதற்காக மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பு பணி அவசியம் தேவை. ஆனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத அரசாக தமிழக அரசு செயல்படுவது நியாயமில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு, அதை வாங்கிக்குடித்ததில் 5 பேர் உயிரிழந்ததும், பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் வேதனைக்குரியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உயிர் போனபிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுப்பதும், நிவாரணம் வழங்குவதும் சரியான தீர்வாக அமையாது. மாறாக கள்ளச்சாராயம் இல்லை என்பதற்கான நடவடிக்கையை முன்பாகவே எடுத்திருக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து விரைவில் அவர்கள் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தமிழக அரசு, இனியாவது மாநிலத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா