வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா- கம்போடியா கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2-வது கூட்டம், புதுதில்லி வனிஜ்ய பவனில் இந்தியாவின் சார்பில் நேற்று (19.06.2024) நடைபெற்றது. மத்திய வர்த்தக –தொழில் துறையின் இணைச்செயலாளர் திரு சித்தார்த் மகாஜன் மற்றும் கம்போடியா அரசின் சர்வதேச வர்த்தகத் துறை தலைமை இயக்குநர் திரு லாங் கெம்விச்சே ஆகிய இருவரும் கூட்டாக இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தனர். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திரு சித்தார்த் மகாஜன், இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மின்னணு ஆளுமை, புதியப் பொருட்களை அடையாளம் காண்பதன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை பல்வகைப்படுத்துதல், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள், இந்திய மருந்து தயாரிப்பு தொழிலை அங்கீகரித்தல் மற்றும் மருந்தியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்க, யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் ஒத்துழைப்புக்கான முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திவாஹர்