புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்’ (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP – எஃப்டிஐ-டிடிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (22-06-2024) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டம் (FTI-TTP-எஃப்டிஐ-டிடிபி) இந்திய மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கு முயற்சியாகும் என்று கூறினார். இந்த முயற்சி பிற நாடுகளிலிருந்து வரும் இந்திய பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியப் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த வசதி அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று திரு அமித் ஷா கூறினார். இத்திட்டம் பயணிகளுக்கு வேகமான, எளிமையான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எஃப்டிஐ-டிடிபி இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். நாட்டின் 21 முக்கிய விமான நிலையங்களில் எஃப்டிஐ-டிடிபி தொடங்கப்படும். முதற்கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய விமான நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்படும்.
திவாஹர்