எம்ஐடி-ஏடிடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விஞ்ஞான் பாரதியின் 6- வது தேசிய மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய பிரச்சினைகளுக்கு இந்திய தீர்வுகளே தேவை என்றார். 1980-களில் தொடங்கப்பட்ட விஞ்ஞான் பாரதியின் பயணத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அறிவியல் துறையில் இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
நமது மரபணு உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபடுகிறது என்றும் எனவே இந்தியாவில் சில நோய்கள் அதிகமாக உள்ளன என்றும் அவர் கூறினார். இவற்றை எதிர்கொள்ள நமக்கு ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறையும், நமது பாரம்பரிய அறிவும் அவசியம் என்று அவர் தெரிவித்தார். அத்துடன் நவீன மருத்துவமும் அவசியம் என்று அவர் கூறினார்.
பாரம்பரிய அறிவு நமது தனிச்சிறப்பான சொத்து என்று அவர் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த செயல்பாட்டுக்காக ‘பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகத்தை’ இந்தத் துறை தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். கொவிட் காலங்களில் நமது பாரம்பரிய மருத்துவம் நல்ல பலன் அளித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், 2014-ம் ஆண்டு முதல் இத்துறையில் இந்தியா முன்னணி நாடாக மாறியுள்ளது என்றார்.
2014 ஆம் ஆண்டில் 350 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன எனவும் தற்போது 2024-ம் ஆண்டில் அது கிட்டத்தட்ட 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக் குறியீட்டில் 2014-ம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 40-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அறிவியலில் அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்ட ஆய்வில் (பி.எச்.டி) இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்று அவர் கூறினார். அறிவியல் வளர்ச்சியில் விஞ்ஞான் பாரதி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
எம்.பிரபாகரன்